Thursday, 8 September 2016


புதுச்சேரி


நம் பயணத்திற்குமுன் புதுச்சேரி பற்றிய சில வரலாற்றுப் பின்னணித் தகவல்கள்;
புதுச்சேரிவாசி ஒருவரின் பகிர்வு:

*** புதுச்சேரி கச்சேரி - 526 ***

நமது புதுச்சேரி பற்றிய அடிப்படையான நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் நாம் ஆர்வம் காட்டவேண்டும். அப்போதுதான், நம்மூர் பற்றிய தவறான பிம்பங்களை உடைத்தெறிந்து நம்மிடமிருக்கும் பெருமைமிகு விஷயங்களை பிறர்க்கு எடுத்துச் சொல்லமுடியும். இதோ, சிலக் குறிப்புகள்.

நமது புதுச்சேரி மாநிலத்தின்

விலங்கு : அணில்
பறவை : குயில்
பூ : நாகலிங்கப் பூ
மரம் : பெயில் பழ மரம்
(இதை கிராமங்களில் 'ஆத்தாப்பழ மரம் என்று சொல்கிறார்கள்)

1674 இல் ஃப்ரெஞ்சு காலணிப் பகுதியின் தலை நகரமாக அறிவிக்கப்பட்டது நமது புதுச்சேரி. 18.10.1954 இல் நம் நகராட்சியிலும், கொம்யூன்களிலும் நடைபெற்ற தேர்தலில் 170 பேர் சுதந்திரம் வேண்டுமென்றும், எட்டு பேர் வேண்டாமென்றும் வாக்களித்தனர். 01.11.1954 இல் இந்தியாவுடன் இணைந்தது புதுச்சேரி. ஆனாலும் முறைப்படியான ஒப்பந்தம் கையெழுத்தான நாளான ஆகஸ்ட் 16 அன்றே சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது.  விடுதலை கால மக்கள் இயக்கத்தின் கோரிக்கையினால் நவம்பர் 1 அன்றே சுதந்திரதினம் என்றாக்கப்பட்டு ஆகஸ்ட் 16 குடியரசு தினம் என்று அறிவிக்கப்பட்டது.

07.01.1963 இல் முதல் முழுமையாக இந்தியாவுடன் இணைந்தது புதுச்சேரி. முதல் முதலமைச்சராக 01.06.1963 அன்று குபேர் அவர்கள் பொறுப்பேற்றார். ஒரே வருடத்தில் முதல்வாரக வெங்கடசுப்பா ரெட்டியார் பொறுப்பேற்றார். பின்னர் ஃபரூக் அவர்கள் மீண்டும் வெங்கடசுப்பா ரெட்டியார் என்று முதல் ஐந்தாண்டுகளிலேயே காங்கிரசில் முதல்வர்கள் மாறினர். முதல்வர்களை கணக்கெடுத்தால் அது ஏகத்துக்குச் செல்லும். தாறுமாறாக நம் அரசியல் கையாளப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அத்தனைக் குழப்பங்கள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும். முதல்வர்களைப் போல கவர்னர்களும் ஆண்டிருக்கின்றனர்.

1969 - இல் 189 நாட்களும், 1974 - இல் 62  நாட்களும், 1977 முதல் மூன்று வருடங்களும், 1983 முதல் ஒரு வருடம் 265 நாட்களும், இறுதியாக 1991 இல் 123 நாட்களும் புதுவை குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டது. ஐந்து வருடங்களை முடித்தவர்களில் முதலாமவர் சமீபத்திய முதல்வர் திரு.ரங்கசாமி அவர்கள் மட்டுமே. அவர் ஐந்து வருடங்கள் 20 நாட்கள் முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிறார். இரண்டாவதாக திரு.ஃபரூக் அவர்கள் 4 வருடங்கள் 353 நாட்களும், மூன்றாவதாக திரு.வைத்திலிங்கம் அவர்கள் 4 வருடங்கள் 314 நாட்களும் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர்.



நான்கு மாவட்டங்களைக் கொண்டது.
190 சதுர மைல் பரப்பளவு கொண்டது.
12,44,464 மக்கள் தொகை கொண்டது.

ஆட்சி மொழிகள் : தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு
இந்துக்கள் 87% பேரும், கிறித்தவர்கள் 6.2% பேரும், இஸ்லாமியர்கள் 6% பேரும் வசிக்கின்றனர்.

Treaty of Cessation 1956 இன் படி ஃப்ரெஞ்சு மொழியும் நம் அலுவல் மொழியாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி மொழியாக ஃப்ரெஞ்சு மொழி வேண்டாம் என்று முடிவெடுக்கும் வரை இது தொடரும்.

நமது நான்கு மாவட்டங்களும் சேர்த்து 45 கிமீ கடற்பகுதியைக் கொண்டிருக்கிறோம். 27 மீனவ கிராமங்கள் இருக்கின்றன. சுமார் 65,000 மீனவர்கள் வசிக்கும் நம் புதுவையில் மீன்பிடித் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுவருபவர்கள் 13,000 பேர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 2552 கிமீ சாலைகள். அதில் தேசிய நெடுஞ்சாலை சுமார் 64.5 கிமீ, நம் மாநில நெடுஞ்சாலை சுமார் 49 கிமீ. மாவட்டச் சாலைகள் 274.6 கிமீ. கிராமச் சாலைகள் 248 கிமீ.

புதுச்சேரியில் இளைஞர்கள் அதிகம். இன்றையப் புதுச்சேரி மக்களில் பலருக்குக் குடிப்பழக்கம் இல்லை. புதுச்சேரி உலக அளவில் உள்ள சிறந்தச் சுற்றுலாத் தளங்களுள் ஒன்று. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பலர் ஆசிரமத்தையும், ஆரோவில்லையும் பார்க்கவருகிறார்கள். தென் தமிழகத்தில் புதுச்சேரியில் மதுவிலைக் குறைவு என்பதால் இளைஞர்கள் வார இறுதி நாட்களில் இங்கேப் படையெடுத்துவருகின்றனர். பாதுகாப்பான சுற்றுலாப் பகுதிகளில் இந்தியாவிலுள்ள சில நகரங்களில் நம் புதுச்சேரியும் ஒன்று. சமீபகாலமாக புதுச்சேரி கல்விக் கேந்திரமாக இருந்து வருகிறது.

எனது புதுச்சேரி என்ற எண்ணம் கொள்வோம்.
நமது வளர்ச்சி என்று வாழ்ந்துக் காட்டுவோம்.




No comments:

Post a Comment