Saturday, 5 November 2016

கற்கத் தவறிய பாடங்கள்


கற்கத் தவறிய பாடங்கள்-அ.ஜான்லூயி
(முன்னாள் இணை இயக்குநர், புதுவை மாநிலக் கல்வித்துறை)

மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு கல்வியின் குறிக்கோளும் மாறும். ஒரு நாடு பகைவர்களால் சூழப்பட்டிருக்கும்போதும், ஒரு நாட்டில் அமைதி தவழும்போதும் கல்வியின் இலக்கு ஒரே மாதிரியாக இருக்க முடியாது. கிறித்துப் பிறப்பதற்கு முன்னம் ஸ்பார்ட்டா நாட்டில் தாயின் மடியில் பால் குடித்துத் தவழும் குழந்தைகளை அரசு வலிய எடுத்து, திடமற்ற நோயுற்ற குழந்தைகளை மலை முகட்டிலிருந்து தூக்கி எறிந்து கொன்றுவிட்டு, வலிமை மிகுந்த குழந்தைகளுக்குக் கடுமையான உடற் பயிற்சி தந்தது எனப் படிக்கிறோம். அதே நேரத்தில் கிரேக்க நாட்டில், ஏதன்சு நகரத்தில் அமைதி தவழ்ந்ததால், அங்கு மக்கள் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதையும் அழகுச்சிலைகளை உருவாக்கியதையும், அதிசயக் கட்டடங்களைக் கட்டியதையும், சிந்தனையாளர்களைப் படைத்ததையும் காண்கிறோம். உலகிலேயே முதன் முதலாக ஏதன்சு மாநகரில் மட்டுமே ஜனநாயக ஆட்சிமுறை நடைமுறைப் படுத்தப்பட்டதையும் பார்க்கிறோம். ஸ்பார்ட்டா தேசத்தில் கல்வி அமைப்பு, போர் வீரர்களைப் படைத்தது. ஆனால், ஏதன்சு நகரத்தின் கல்வி முறையோ ஒரு சாக்ரட்டீசையும், அரிஸ்டாட்டிலையும், பிளேட்டோவையும் படைத்தது.
சோவியத் ரஷ்யாவின் கல்வி நோக்கமும் அமெரிக்காவின் கல்வி எதிர்பார்ப்புகளும் ஒன்றாக இருக்க முடியாது. வாதிக்கன் பிரதேசக் கல்வியும், ஈரான் நாட்டின் இன்றைய கல்வியும் ஒத்திருக்க முடியாது. மன்னராட்சியில் இருக்கும் கல்வி சித்தாந்தம், கம்பன் காலத்துச் சித்தாந்தத்திலிருந்து மாறுபட்டு இருப்பதில் வியப்பொன்றுமில்லை. நம் நாட்டில்கூட முந்தைய காலத்துக் குருகுல முறைக் கல்வி நாம் வாழும் இக்காலத்திற்கு ஒத்து வருவதில்லை. துரோணாச்சாரியாரின் வில் வித்தையை இன்று யாரும் கற்பதில்லை. காரணம்; அதற்கு அவசியம் இல்லை. இலத்தீனும், கிரேக்கமும் ஹிப்ருவும், சமஸ்கிருதமும் வழக்கொழிந்த மொழிகளாகப் போனதால் யாரும் அவற்றைக் கட்டாயப் படுத்தப் போவதில்லை. காரணம் அவை தேவையில்லாமற் போய்விட்டன. வில்வித்தையை மறந்துவிட்டுக் குழந்தைகளுக்குக் கம்யூட்டர் கல்வி போதிக்கின்றோம். ஆங்கிலக் கல்வியை வலியுறுத்துகிறோம். இது காலத்தின் கட்டாயம்.
நான் படித்த காலத்துத் தலைமுறையினர் சுற்றுப்புறச் சூழல் கல்வி படித்ததில்லை. ஆனால். இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் இவைகளைக் கட்டாயப் பாடமாகப் பயில்கின்றனர். காரணம்; இன்று என்று மிலாத அளவிற்குச் சுற்றுப் புறச்சூழல் மாசு பட்டிருப்பதாலும், நாம் கட்டிக் காத்த நாகரிகம் மக்கட் பெருக்க வெள்ளத்தால் அழிந்து படும் அபாயத்தில் இருப்பதாலும் இத்தகைய கல்வி தேவைப்படுகிறது.
எனவே, கல்வியின் நோக்கமும் உள்ளடக்கமும் காலத்திற்கேற்ப மாறும்; மாறத்தான் வேண்டும்.  

- கற்கத் தவறிய பாடங்கள் (பக் 2.) அ.ஜான்லூயி, புதுவை மாநிலக் கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர்.

No comments:

Post a Comment